கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!
மனோஜ் போன்ற நல்ல இயக்குநர் கிடைப்பது பெரிய விஷயம் என நடிகர் ஷ்யாம் செல்வன் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார் என்று சொல்லவேண்டும். இறப்பதற்கு முன்பு கூட ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது ” பாரதிராஜா பையன் என்று சொல்வதற்கு சுலபமாக தான் இருக்கும். ஆனால், எனக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது? என்று நான் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் தான் தெரியும்” எனவும் வேதனையுடன் பேசியிருந்தார்.
அந்த மன அழுத்தங்கள் காரணமாக தான் மனோஜிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பிரபலங்கள் பேசி வருகிறார்கள். உதாரணமாக தம்பி ராமையாவும் இது தான் காரணம் என பேசியிருந்தார். இதனையடுத்து, மார்கழி திங்கள் படத்தில் நடித்த ஷ்யாம் செல்வன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மனோஜ் பெரிய தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொன்னதாகவும், அந்த கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துவிட்டு மனோஜ் வெளியே சென்ற பிறகு கெட்டவார்த்தையால் திட்டியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஷ்யாம் செல்வன் ” எனக்கு மனோஜ் சார் இயக்கிய முதல் படமான மார்கழி திங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயமாக பார்க்கிறேன். அவருடைய இயக்கத்தில் நான் நடிக்கும்போது என்னை அவர் ஒரு நடிகராக பார்க்கவில்லை என்னை ஒரு பிள்ளைபோல பார்த்துக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு ஊட்டிவிட்டார். இதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது” என பேசினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய ஷ்யாம் செல்வன் ” என்னிடம் மனோஜ் சார் மிகவும் வேதனைபட்டு கூறிய விஷயங்களில் ஒன்று தயாரிப்பாளர் ஒருவர் திட்டியது தான். ஒரு முறை பெரிய தயாரிப்பாளரிடம் நானும் மனோஜ் சாரும் கதை சொல்ல போயிருந்தோம். அந்த கதையை கேட்டுவிட்டு தயாரிப்பாளரும் பிடித்திருக்கிறது நாம் இந்த படம் செய்யலாம் என கூறினார். அதன்பிறகு வெளியே வந்தவுடன் காதில் கேட்கும்படி மனோஜ் சாரை தகாத சில வார்த்தைகளால் திட்டினார்.
இதனை கேட்டுவிட்டு என்னிடம் வந்து மனோஜ் சார் மிகவும் வேதனையுடன் சொன்னார். எனக்கு கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்ன சார் உங்களுக்கே இப்படி நீங்கள் எவ்வளவு பெரிய இயக்குநரின் மகன் உங்களுக்கு இப்படி என்றால் எங்களுக்கு எல்லாம் மதிப்பே இருக்காது என சொன்னேன். அவரை போல ஒரு இயக்குநர் கிடைக்க என்னை போன்றவர்கள் குடுத்து வைத்திருக்கவேண்டும். அண்ணன் போல என்னை பார்த்துக்கொண்டார். அவர் இப்போது இல்லாதது வேதனையாக இருக்கிறது” எனவும் ஷ்யாம் செல்வன் தெரிவித்துள்ளார்.