தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
அதிலும், தூத்துக்குடியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால், தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன் மழை நீர் தேங்கியது.
இதை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் கனமழை
இன்று (மார்ச் 22) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தூத்துக்குடியில் கனமழை
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இரவு முதலே கனமழை வெளுத்து வாங்கி வருவதால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது