ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் 2025 சீசனில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் வர்ணையாளராக களமிறங்க உள்ளார்.

டெல்லி : ‘ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி’ என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின் கடைசி அத்தியாத்தை எழுதி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி போல ஜெயித்தாலும் தோற்றாலும் அதனை சிரித்த முகத்தோடு எதிர்கொள்ளும் நல்ல வீரராக வலம் வருகிறார் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியை நீண்ட வருடங்கள் வழிநடத்தி வந்தவர், ஐபிஎல்-ல் 2015 முதல் விளையாட தொடங்கிய வில்லியம்சன் 2018 முதல் 2022 வரை சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியை வழிநடத்தினார். 2016இல் ஹைதிராபாத் அணி கோப்பையை வெல்லும் போது அதில் இடம்பிடித்து இருந்தார். 2018இல் இந்த அணியை இறுதி போட்டிவரை முன்னெடுத்து சென்றார். அந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் ஆரஞ்சு தொப்பி வாங்கினார். அதன் பிறகு 2023-ல் குஜராத் அணியில் இடம்பெற்று இருந்தார். 2024-ல் மீண்டும் ஹைதிராபாத் அணியில் இடம்பெற்று இருந்தார்.
இவ்வளவு ஐபிஎல் பயணங்கள் கொண்ட கேன் வில்லியம்சனை இந்த முறை ஐபிஎல்-ல் எந்த அணியும் எடுக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அடிப்படை விலையில் கூட யாரும் எடுக்கவில்லை. இப்படியான சூழலில் கேன் வில்லியம்சன் இந்த முறை ஐபிஎல்-ல் வீரராக அல்லாமல் போட்டியின் வர்ணையாளராக களமிறங்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.