நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?
நாக்பூர் வன்முறையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி பாஹிம் கான் 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. கடந்த மார்ச் (2025) 17-ஆம் தேதி நாக்பூரில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு இன்று நாக்பூர் அமைதிக்கு திரும்பியுள்ளது.
திங்கட்கிழமை காலை விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, இரு சமூகங்களுக்கிடையில் மோதல் தொடங்கியது. அந்த சமயம் காவல்துறையை சரியான நேரத்தில் ஈடுபட்ட காரணத்தால் போராட்டம் கொஞ்சம் குறைந்தது. இருப்பினும், அடுத்ததாக மாலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியது, இரவு இரண்டு மணி வரை தொடர்ந்த சூழலில், வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அத்துடன் பல வீடுகளும் ஒரு மருத்துவமனையும் சேதமடைந்தன. கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 33 போலீசார் காயமடைந்தனர்.
மேலும், நாக்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்குப் பிறகு, மகாராஷ்டிர அரசியலும் சூடுபிடித்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு ஆளும் மகா கூட்டணியை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கலவரத்தைத் தூண்டும் பொறுப்பை ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் மீது சுமத்தி வருகிறது. எனவே, அங்கு பரபரப்பான சூழலாக இருந்து வரும் நிலையில் இந்த கலவரத்தை தூண்ட முக்கிய புள்ளியாக செயல்பட்ட பாஹிம் கான் என்பவரை காவல்துறை கைது செய்தது.
மக்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டதாக ஃபஹீம் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, அதிரடியாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இவரை வரும் மார்ச் 21-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், ஃபஹீம் கான் மட்டுமின்றி, 51 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யார் இந்த பாஹிம் கான் ?
38 வயதான ஃபஹீம் ஷமிம் கான் நாக்பூரில் சிறுபான்மை ஜனநாயகக் கட்சியின் (MNDP) தலைவராக இருப்பவர் எனவும், 2024 மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை எதிர்த்து ஃபஹீம் கான் போட்டியிட்டார். இருப்பினும், அவர் தேர்தலில் 6.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 1073 வாக்குகளை மட்டுமே பெற்றார். அவர் நாக்பூரில் உள்ள சஞ்சய் பாக் காலனியில் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.