டிஜிட்டல் முறையில் பார்க்கிங் வசதி…சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் அறிவிப்புகள்!
50 சென்னை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்றும் தலா ரூபாய் 60,000 என்ற அடிப்படையில் சமப்படுத்தி சீரமைக்கப்படும் என பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு வைத்து மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் மாணவர்கள் பலரும் பயன்பெறும் வகையில், சில முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளது. அதனை தவிர சென்னையை இன்னும் வளர்ச்சி அடையவைக்கும் வகையில் சில விஷயங்களும் அறிவிக்கப்பட்டது. அதில் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், டிஜிட்டல் முறையில் பார்க்கிங் வசதி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (Public Private Partnership) டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்கப்படும் எனவும், அப்படி அமைக்கப்பட்டால் வாகன நெரிசல் குறைவதுடன் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் மேயர் பெரிய தகவலை தெரிவித்தார்.அது எப்போது அமைக்கப்படும் அதற்காக எவ்வளவு ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்க வாட்ஸ்அப் மூலம் தகவல் தொடர்புகளை உருவாக்க ரூ.4.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, சுரங்கப்பாதைகளில் ஒவியங்கள் வரைந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்க ரூ. 14.40 கோடி ஒதுக்கீடு மற்றும் மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியை அழகுப்படுத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.