மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டது. இன்று புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 7வது நாளில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
அதில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, உப்புத்தண்ணீர் அதிகளவில் இருக்கும் கடற்கரையோர உப்பள பகுதி மக்களுக்கு தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர் கேன் விநியோகம் செய்யப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தார். மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் இந்த உதவி தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.