சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?
ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.5,145.52 கோடி மதிப்பில் மேயர் பிரியா தாக்கல் செய்தார்.

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.5,145.52 கோடி மதிப்பில் மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதன்படி, மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்படும் என்றும், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
இதில் குறிப்பாக, சென்னைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன பார்க்கலாம்.
மாணவர்களுக்கான அறிவிப்பு
சென்னைப் பெருநகர மாநகராட்சியில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த 141 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 சம்பளம் வழங்க ரூ.2.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பள்ளிகளில் 1.20 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.8.50 கோடியில் தலா 2 சீருடைகள் வழங்கப்படும். உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளில் பணியாற்ற விரும்புவோர்க்கு வளமிகு ஆசிரியர் குழு அமைக்கப்படும். இந்தக் குழு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ரூ.75 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும். போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000 முதல் ரூபாய் 150,000 வரை வழங்கப்படும்.
மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும். தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கு பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 2,500 மதிப்பிலான தரமான Sports Shoes வழங்கப்படும்.
மாணவ மாணவியர்கள் புவியியல் பாடத்தினை எளிதாக கற்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் தலா ஒரு புவி உருண்டை (Globe) வீதம் 2300 வகுப்பறைகளுக்கு ரூபாய் 39.10 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். சென்னை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்றும் தலா ரூபாய் 60,000 என்ற அடிப்படையில் சமப்படுத்தி சீரமைக்கப்படும்.
சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகளில் பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000 வீதம் வழங்கப்படும்.