“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!
அண்ணாமலை டூப் போலீஸ் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியிருக்கிறார்.

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய நிலையில் இந்த விவகாரம்ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் திமுக குறித்து விமர்சனம் செய்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதைப்போல, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முற்றுகை போராட்டம் நடத்தி திமுகவுக்கு கண்டனங்களை தெரிவித்தார்.
போராட்டம் நடத்தியபோது கைது செய்யபட்ட அண்ணாமலை “ரூ. 1,000 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள டாஸ்மாக் ஊழலின் A1 குற்றவாளி முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலை பேசியதற்கு டாஸ்மார்க் விவகாரம் குறித்து த.வெ. க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார்.
முதலில் அண்ணாமலை குறித்து பேசிய சேகர் பாபு ” தமிழ்நாடு காவல்துறை அண்ணாமலையை போல டூப் போலீஸ் இல்லை. கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்களை துரத்தி பிடித்து தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்திருப்பதில் அண்ணாமலைக்கு உடன் பாடு இல்லை. அதனால் தான் காவல்துறையினர் இனிமேல் தூங்கமாட்டார்கள் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
அவர் சொன்னது உண்மை தான் தமிழக காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தூங்கமாட்டார்கள். இந்த நாட்டை காப்பாற்றுவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும் தூக்கம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனையெல்லாம் தெரியாமல் அண்ணாமலை டூப் போலீஸ் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு.
இது போன்ற அரசியல் மாநில தலைவர்கள் சாலையோர கச்சேரி நடத்துபவர்கள் போல பேசுவதற்கு நான் பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. அண்ணாமலைக்கு நான் சொல்லிக்கொள்வது நாங்கள் சாதாரண இயக்கத்தை நடத்தவில்லை ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றோரு கன்னத்தை காட்டுவதற்கு வீட்டுக்கு முற்றுகை போராட்டம் என அறிவித்திருக்கிறார். இதற்கு தேதி குறிக்க சொல்லுங்கள்..வர சொல்லுங்கள் அந்த போராட்டம் நடைபெறும் போது காவல்துறை இல்லாமல் திமுக தொண்டன் எப்படி எதிர்ப்பான் என்பது அப்போது தெரியும்” எனவும் பேசினார்.
அதனைத்தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு ” இன்னும் யாரவது கீழே இருந்து சொல்கிறார்கள் என்றால் அவர்களை பற்றியும் கேளுங்கள் அதற்கும் பதில் சொல்கிறேன். முதலில் அவர்களை களத்திற்கு வர சொல்லுங்கள்…களத்தில் வராமல் சும்மா பேசிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? சும்மா ஊடகத்திற்காக அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்” எனவும் சாடியவாறு சேகர்பாபு பதில் அளித்தார்.