அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொன்ன பதில்?
சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சஸ்பென்ஸான பதிலை கூறியிருக்கிறார்.

சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் கோரி வருவதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தது.
தேமுதிக இந்தக் கோரிக்கையை அதிமுக தலைமை முழுமையாக ஏற்கவில்லை என்பதால் இரண்டு கட்சிகளுடைய கூட்டணியில் சலசலப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. முன்னதாக இப்படியான தகவல்கள் பரவியவுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கூட்டணி தொடருமா? என கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கு அப்போது ” கண்டிப்பாக எங்களுடைய கூட்டணி தொடரும் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை” என்பது போல தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு கடந்த மாதம் கூட்டணி குறித்த கேள்வி கேட்கும்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “2026 தேர்தல் கூட்டணி பற்றி இப்போது கணிப்பது சிரமம், தேர்தலுக்கு முன் முடிவு செய்வோம்” என கூட்டணி உறுதி என்று சொல்லாமல் சூசகமாக பேசி வருகிறார்.
அப்படி தான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? என்கிற கேள்வியை கேட்டனர். அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் ” இந்த கேள்விக்கு நான் என்னுடைய பதிலை அடுத்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன். எங்களுடைய கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்பதை அந்த நாளில் தெரிவிக்கிறேன். அதுவரை இது பற்றிய கேள்வியை என்னிடம் கேட்கவேண்டாம். ஆனால், நிசம்மாக வெற்றிபெறும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.