டாஸ்மாக் விவகாரம் : அண்ணாமலை உள்ளிட்ட 107 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவினர் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கவில்லை என கூறி காவல் துறையினரிடம் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து நேற்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், இந்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் மற்றும் சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதனால், போராட்டங்கள் நடைபெறுவது தடுக்கப்பட்டது. காலையில் கைது செய்யபட்ட அவர்கள் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கவில்லை என கூறி காவல் துறையினரிடம் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அண்ணாமலை உள்ளிட்ட 107 பேரை இரவு 7 மணிக்கு தடுப்புக் காவலில் இருந்து விடுவித்த போலீசார், அவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, பாஜகவினர் இந்த நடவடிக்கையை ஜனநாயக உரிமைக்கு எதிரான நடவடிக்கையாக விமர்சித்தனர், அதே சமயம் டாஸ்மாக் முறைகேடுகளை ஆளும் திமுக அரசு மறுத்து, அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறியது.