சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!
பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கூட்டத்திற்கு பங்கேற்க வந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திக்காமல் சபாநாயகருடனான நடத்திய சந்திப்பு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டன. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மார்ச் 15) சபாநாயகர் அப்பாவுவை தனியாக சென்று நேரில் சந்தித்தது பேசும் பொருளானது.
இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இ.பி.எஸ். கருத்து குறித்த கேள்விக்கு சபாநாயகர் உடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்த செங்கோட்டையன், “சபாநாயகரை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். எனது தொகுதி சார்ந்தும், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனை குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்க சபாநாயகரை சந்தித்தேன்.
இன்று கூட 7 எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்திருக்கிறார்கள் ” என்றார். மேலும், கொடிவேரி அணையிலிருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து தொழிற்சாலை அமைப்பதை தடுக்க கோரிக்கை வைத்துள்ளேன் என்று கூறியதோடு, ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு, “கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது” என பதில் அளித்தார்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திக்காமல் சபாநாயகரை சந்தித்தது குறித்து இன்று காலை வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், அவரிடமே கேளுங்கள் என இபிஎஸ் சொல்ல, அதற்கு பதில் அளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் செங்கோட்டையன். இது தொடர்பாக மேலும் பேசிய ஈபிஎஸ்,”திமுகவைப் போல், தான் யாரையும் அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும், அதிமுகவினர் சுதந்திரமாகவே செயல்படுகிறார்கள்” என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.