தமிழக பட்ஜெட் 2025 : மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு.., மொத்த விவரம் இதோ…
சமூகநீதி, தமிழர் நலன், இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன், பசுமை வழி பயணம், தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026 பற்றிய முழு விவரம் இதோ...

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். ஆளும் திமுக அரசின் இறுதி முழு பட்ஜெட்டிற்கான இந்த பட்ஜெட் உரை சுமார் 2 மணிநேரம் 33 நிமிடங்கள் வாசிக்கப்பட்டது.
சமூகநீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவ பாதை, பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை முன்வைத்து இந்த நிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புக்கு, தொழில்துறை மேம்படுத்தும் அறிவிப்புகள் மட்டுமின்றி தமிழர் பண்பாடு மொழி சார்ந்த முக்கிய அறிவிப்புகளும் இதில் இடம் பெற்று இருந்தன.
தமிழ் மொழி நலன் :
- மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு.
- பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழர்கள் அதிகம் வாழும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்
மாணவர்களுக்காக…,
- மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத காரணத்தால் மத்திய அரசு ரூ.2150 கோடியை வழங்கவில்லை. இந்த தொகையை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து நிதியை விடுவித்துள்ளது.
- ரூ.65 கோடி மதிப்பீட்டில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
- ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் தரம் உயர்த்தப்படும்.
- பள்ளிக்கல்வியில் மற்ற விளையாட்டுகளை போல சதுரங்க ஆட்டத்தை உடற்கல்வியில் சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
- நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
- அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும். இதற்காக ரூ.50 கோடி மதிப்பீட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும்.
- பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் 14 உயர் நிலைப்பள்ளிகளானது மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது. இத்திட்டமானது நகர்ப்புறத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
- ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
- அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
மகளிருக்காக..,
- விடியல் பயண திட்டம் மாதம் ரூ.888-ஐ பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. இதற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். அதன்படி, ரூ.37,000 கோடி கடனும் வழங்க இலக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
- ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
- உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறாதவர்களும் பயன்பெறும் வகையில், புதிதாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும். இத்திட்டத்திற்காக அரசு ரூ.13,807 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
- ஏப்ரல் 1, 2025 முதல், பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும். இது 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளுக்கு பொருந்தும்.
சமூக நலன் :
- பெற்றோரை இழந்த சுமார் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1,763 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வழங்கப்படும்.
- பழங்குடியினருக்கான வாழ்வாதார நலனுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு :
- சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில் ரூ.4,625 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ நீட்டிப்பு செய்யப்படும். இதற்காக மத்திய அரசின் நிதி பங்களிப்புக்கு ஒப்புதல் கோரப்படும்.
- கோவை: அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களுக்கு ரூ.10,740 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை இணைப்புக்கு ரூ.11,368 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
- சென்னையில் ரூ.25 கோடியில் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கான மையம் அமைக்கப்படும்.
- காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ரூ.120 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
- 7 மாவட்டங்களில் ரூ.6,668 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் 29.74 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
வேலைவாய்ப்புகள் :
- மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் காலணித் தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தொழில்மயமாக்கல், முதலீடுகளை ஊக்குவித்து தொழில் வளர்ச்சி அடையும் நோக்கில் 9 இடங்களில் ரூ.3,566 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- காஞ்சிபுரம்-திருமுடிவாக்கம், மதுரை கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் சாரம், கரூர் நாகம்பள்ளி, தஞ்சை-நடுவூர், திருச்சி சூரியூர், நெல்லை-நரசிங்கநல்லூர், ராமநாதபுரம் தனிச்சியம் ஆகிய இடங்களில் இந்த SIPCOT-க தொழிற்பேட்டைகள் அமையவுள்ளன.
- ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
தொழிலாளர்கள் நலன் :
- தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சுயசார்பு தொழிலாளர்கள் நலனுக்கான 2,000 தற்சார்பு தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்குவதற்கு தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
- ரூ.50 கோடியில் விசைத்தறி தொழிலை நவீனப்படுத்தும் திட்டம்.
போக்குவரத்து :
- சென்னையில் 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூரில் 75 மின் பேருந்துகள், மதுரையில் 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகளானது உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் வாங்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
- இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
தொல்லியல் துறை :
- சிவகங்கை – கீழடி சேலம் – தெலுங்கனூர் கோயம்புத்தூர் – வெள்ளலூர் கள்ளக்குறிச்சி – ஆதிச்சனூர் கடலூர் – மணிக்கொல்லை தென்காசி கரிவலம்வந்தநல்லூர் தூத்துக்குடி – பட்டணமருதூர் நாகப்பட்டினம் ஆகியவற்றி தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படுவதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.40 கோடியில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக் கூடம் அமைக்கப்படும்.
- ஈரோட்டில் ரூ.22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகம். ராமநாதபுரத்தில் ரூ.21 கோடியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்காக..,
- அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.
- விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரை நிதியுதவியாக வங்கிகள் வழங்கும்.
- விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் மகளின் உயர் கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரை வங்கிகள் வழங்கிடும்.
- அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வங்கிகள் வழங்கிடும்.
- தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது, உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.
ஆன்மீகம் :
- பழமையான பள்ளிவாசல்கள், தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி நிதி மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025