உயர்ந்த”ஷேர் ஆட்டோ கட்டணம்”அதிர்ந்த பொதுமக்கள்..!!
பெட்ரோல் டீசல் விலை உயர்வின் தொடர்ச்சியாக சென்னை மக்களுடன் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்ட ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகர மக்கள் போக்குவரத்துக்காக அரசு மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயிலை பெரும்பாலும் நம்பியுள்ளனர். இதுதவிர அரசு சார்பில் பல இடங்களில் சிற்றந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில், மக்களின் தேவையை மாநகரம் முழுவதும் இயக்கப்படும் சுமார் 10 ஆயிரம் ஷேர் ஆட்டோக்களும் நிறைவு செய்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதால், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 ஆண்டுகளாக தியாகராயநகர் முகப்பேர் இடையே ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் திருவேற்காட்டைச் சேர்ந்த அன்பு பாபுவிடம் நாம் கேட்டபோது, தாம் தொழில் தொடங்கும்போது 30 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது 78 ரூபாயை தொட்டுள்ளது என்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் வரை லாபம் கிடைத்த நிலையில் தற்போது 400 ரூபாய் கூட கிடைப்பது சிரமமாக உள்ளது என்று அவர் ஆதங்கப்படுகிறார்.பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் சராசரியாக 5 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தியாகராயநகரில் இருந்து அண்ணா நகருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும்; முகப்பேர் மேற்கு பகுதிக்கான கட்டணம் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூரில் இருந்து வள்ளூவர் கோட்டத்திற்கு 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், தியாகராய நகருக்கான கட்டணம் 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அண்ணாநகர் எல்.ஐ.சி இடையேயான கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகியுள்ளது.தற்போது மஞ்சள் நிற ஷேர் ஆட்டோகளின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டாடா மேஜிக் எனப்படும் வெள்ளை நிற ஷேர் ஆட்டோகளில் குறிப்பாக, வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வால் அன்றாட செலவினங்கள் அதிகப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
DINASUVADU