உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!
இருமொழி கொள்கை – மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் எழுந்துள்ளது.

சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடையிலான வார்த்தை மோதல் திவரமடைந்துள்ளது. முன்னதாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மும்மொழி கற்பிக்கும் பள்ளியில் படிப்பதாகவும், திமுக அமைச்சர்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஆங்கில வழியில் படிப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘பழனிவேல் தியாகராஜன், தனது குழந்தைகள் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்ததாகவும், அதில் தமிழ் இல்லை என்பது அண்ணாமலையின் தவறான கற்பனை’ என்றும் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘அமைச்சரின் மகன்களுக்கு கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏழை குழந்தைகளுக்கும் வழங்குங்கள்” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார்.ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,முதல் மொழி- ஆங்கிலம் இரண்டாம் மொழி – பிரெஞ்சு, ஸ்பானிஷ் இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும். தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்” குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் திரு @ptrmadurai அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.
தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல்…
— K.Annamalai (@annamalai_k) March 13, 2025