பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!
முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்க் உடன் அதிவேக இன்டர்நெட் சேவைக்காக இணைந்த நிலையில் தற்போது ஜியோவும் ஸ்டார்லிங்க் உடன் கைகோர்த்துள்ளது.

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய இணையசேவை உலகில் நெம்பர் 1 இடத்தை பிடிக்க ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் VI நிறுவனமும் இருந்தாலும், இவர்கள் அளவுக்கு அவர்களால் ஈடு கொடுக்கமுடியவில்லை என்றே கூற வேண்டும்.
அதிவேக இன்டெர்நெட் சேவை வழங்கும் பொருட்டு நேற்று ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவையுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தது. இதன் மூலம் ஏர்டெல் இணைய வேகம் இந்திய இணைய மார்க்கெட்டில் முக்கிய இடம் பிடிக்கும் எனக் கூறப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று ஏர்டெல் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பில் இனி ஏர்டெல் ஸ்டோர்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களும் கிடைக்கும் என கூறப்பட்டது. இதன் மூலம் ஏர்டெல் – ஸ்டார்லிங்க் நிறுவன ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டது. ஸ்டார்லிங்க் மூலம் சேட்டிலைட் மூலம் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இதனை அடுத்து, இன்று ஜியோவும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு நாங்களும் ‘அதிவேக இன்டர்நெட்’ களத்தில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்டார்லிங்க் உபகரணங்கள் ஜியோ ஸ்டோரில் கிடைக்கும் என்பதை தாண்டி அவை இன்ஸ்டால் (பொருத்தி) செய்து தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ – ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் மூலம் அதிவேக தடையில்லா இன்டர்நெட் சேவையை இந்தியாவில் உள்ள கிராமப்புறங்கள் வரையில் கொண்டு செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.