நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆற்று வடிகால்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த வடிகால்கள் அருகில் வாழும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்கான விவரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் மார்ச் 11, 2025 அன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) வெளியிடப்பட்டது. இது குறித்து மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? ஆய்வில் என்னென்ன ஆபத்துகள் இருப்பது தெரியவந்தது என்பது பற்றி விவிவரமாக பார்ப்போம்.
ஆய்வில் வெளிவந்த தகவல்
நதிகள் மற்றும் திறந்த வடிகால்களில் உள்ள தீவிரமாக மாசுபட்ட நீர், நீண்ட காலமாக இதனால் மக்கள் பாதிக்கப்படுவது தெரிந்ததும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வேதியியல் கழிவுகள், கனிமங்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் உடலில் தேங்கி, புற்றுநோயை உண்டாக்கும் என்பது தெரியவந்தது.
அதைப்போல, ஈயம் (Lead), இரும்பு (Iron), அலுமினியம் (Aluminium) போன்ற கனிமங்கள் மத்திய மாசுபாடு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அனுமதி அளித்ததை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது. தொழிற்சாலைகள் வெளியேற்றும் ரசாயன கழிவுகள், ஆற்றில் கலப்பதன் காரணமாக மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடவடிக்கை
ஆய்வில் இப்படியான அதிர்ச்சி அறிக்கை வெளிவந்த உடனே மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில், முதற்கட்டமாக, நாடு முழுவதும் 19 மாநில புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்கள் (State Cancer Institutes – SCIs) மற்றும் 20 மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்கள் (Tertiary Care Cancer Centres – TCCCs) அமைக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, 22 புதிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (AIIMS) புற்றுநோய் சிகிச்சை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாசுபாடு கட்டுப்படுத்த புதிய சட்டங்கள், தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுமே மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
மக்களுக்கு எச்சரிக்கை
மேலும், மக்களுக்கு மத்திய அரசு சார்பில் இந்த அதிர்ச்சி அறிக்கையை குறிப்பிட்டு பாதுகாப்புகாக சில எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் நீர் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்க வேண்டாம் எனவும், தூய்மை இல்லாத குடிநீரை பயன்படுத்த வேண்டாம் எனவும், வீட்டிற்கு பக்கத்தில் தொழிற்சாலைகள் மற்றும் ஆற்றுகளில் வெளியேற்றப்படும் கழிவுகளை பார்த்தால் அதனை நீக்கம் செய்ய கோரிக்கை வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.