“அன்று தமிழர்கள் தீவிரவாதிகள்? இன்று நாகரீகமற்றவர்களா?” முதலமைச்சர் ஆவேச பதிவு!
பாஜக கொண்டு வரும் தேசிய கல்வி கொள்கையை (NEP) தமிழ்நாடு எக்காரணம் கொண்டும் ஏற்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2ஆம் கட்ட கூட்டத்தொடரில் இந்த விவகாரம் அதிகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவாதத்தின் போது தமிழக எம்பிகளை நாகரீகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சித்து, அதன் பிறகு கண்டனங்கள் எழுந்த பிறகு அந்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அதனை திரும்ப பெற்றிருந்தார்.
இருந்தும், தர்மேந்திரா பிரதான் தமிழக அமைச்சர்கள் குறித்து கடும் விமர்சனம் முன்வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று திமுகவினர் போராட்டங்கள் நடத்தினர். இன்று தமிழக எம்பிகளை அவமரியாதையாகப் பேசிய தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீசானது திமுக சார்பில் எம்பி கனிமொழி மக்களவையில் அளித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், 2024-இல் பா.ஜ.க மத்திய அமைச்சர் ஷோபா “தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!” என பெங்களூரு காபி ஷாப் வெடிவிபத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
2025-இல் பா.ஜ.க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!” என பேசியுள்ளார். இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.கவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது.
“இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்வி கொள்கையை (NEP) எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்” எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025