ஷங்கருக்கு க்ரீன் சிக்னல்… சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்.!

இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான 11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

shankar - chennai hc

சென்னை : கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், உயர்நீதிமன்றத்தில் ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் எழும்பூர் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை ரத்து செய்யவேண்டும் என்று ஷங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே, கடந்த பிப்.17 ஆம் தேதி இந்த வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநர் ஷங்கர் எந்திரன் படத்தில் ஊதியமாக பெற்ற 10.11 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கம் செய்து இருந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது, “தனி நபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கக்கூடாது. குற்றம் நடந்துள்ளதாக ஒரு தனிநபரின் புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குகளைப் பதிவு செய்ய முடியுமா? சொத்தை பறிமுதல் செய்வதற்கு முன்பு புகாரின் இறுதி தீர்ப்புக்காக அமலாக்கத் துறை ஏன் காத்திருக்கவில்லை?” என்று ஷங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ED தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு, “விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், ஒரு தனிநபரின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ED-க்கு அதிகாரம் உள்ளது என்றும், ED-யின் நடவடிக்கையால் சங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எனவே பறிமுதல் செய்வதில் தலையிட வேண்டிய அவசியமில்லை” என்றும் வாதிட்டார்.

அமலாக்கத்துறையின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “சொத்துக்களை முடக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது” என கருத்து தெரிவித்து, சொத்து முடக்கம் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து,  இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, இந்த வழக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்