திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்! 

திருமாவளவன் பேசியதை குறிப்பிட்டு திமுக அரசின் சாயம் வெளுக்கிறது என்று தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

mk stalin - rajmohan

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முதலமைச்சர் ஆட்சியில் இருந்தும் மத நல்லிணக்க மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று. அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் கட்சி அல்லது அமைப்பு நடத்தினாலும், அது கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று. மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்கப் பேரணியை மதுரையில் நடத்த அக்கூட்டமைப்பினர் அனுமதி கேட்டும். ஆளும் தி.மு.க அரசு அனுமதி மறுத்திருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களே நேற்று மதுரையில் நடைபெற்ற அக்கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் விரக்தியோடு பேசி உள்ளார்.

மதநல்லிணக்கப் பேரணி நடத்த அனுமதி மறுத்தது என்பது, மதநல்லிணக்கம் தொடர்பாக இரட்டை வேடம் போடும் தி.மு.க.-வின் கபடநாடகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தி.மு.க. அரசுக்கே வெளிச்சம்.மத நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படும். ஆனால், பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்கு மட்டும் அனைத்து அனுமதியும் அளிப்பது என்பது இந்த தி.மு.க. அரசு தன் மறைமுகக் கூட்டணியை உறுதி செய்வதைத்தானே காட்டுகிறது.

வாய்வித்தையில் மட்டும் தமிழ்நாடு உரிமைகள். மதச்சார்பின்மை என்று கபடநாடகம் ஆடும் இந்த தி.மு.க. அரசால், பா.ஜ.க. மீதானத் தன்னுடைய மறைமுகப் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. பூனைக்குட்டி வெளியே வரத்தான் செய்கிறது. தி.மு.க.வும் பா.ஐ.கவும் ‘எல்லாமுறையிலும் மறைமுகக் கேளிர்’ என்பது, இதுபோன்ற செயல்களால் உறுதியாகவும் செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி உள்ளது. இதை அவர்களின் கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்று. தமிழக மக்களும் உணர்ந்தே வருகின்றனர். எல்லாவற்றிற்கும் சேர்த்து, 2026ல் ஒரு நல்ல முடிவு எங்கள் கழகத் தலைவர் தலைமையிலான நல்லரசு வாயிலாக கிடைக்கத்தான் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்