CISF 56-வது ஆண்டுவிழா…6,553 கி.மீ சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்த அமித்ஷா!
விழாவிற்கு வருகை தந்த தொழில் அமித்ஷா பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். விழாவில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை விமானம் மூலம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை வந்தடைந்தாா்.
அங்கிருந்து சாலை மாா்க்கமாக தக்கோலம் சிஐஎஸ்எப் மண்டல பயிற்சி மையத்துக்கு சென்ற அவர் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.
அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பின், ராணுவ அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா பார்வையிட்டுவிட்டு நினைவு தினங்களின் ஒரு பகுதியாக CISF பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்த அங்கு வைக்கப்பட்டிருந்த CISF பணியாளர்களின் புகைப்படத்துக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிறகு, குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள கடற்கரையிலிருந்து தொடங்கும் சைக்கிள் பேரணியை மத்திய அமைச்சா் அமித் ஷா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணி கடற்கரையையொட்டி 25 நாள்கள் பயணித்து வரும் மாா்ச் 31-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடையும். சைக்கிள் பேரணி பயணத்தை தொடங்கி வைத்த பிறகு சிஐஎஸ்எஃப் இதழான ‘சென்டினல்’யும் வெளியிட்டார். அதனை தொடர்ந்து தற்போது அமித்ஷா உரையாற்றி வருகிறார்.