“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!
ஆந்திராவில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 5 முதல் 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்கிற நிலைப்பாட்டில் தமிழ்நாட்டை ஆளும் திமுக மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கோட்டில் உள்ளன.
இப்படி இருக்கையில், ஆந்திராவில் 10 மொழிகளை கற்றுத்தரப்போகிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிருக்கிறார். டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் மும்மொழி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “மொழி என்பது தகவல் தொடர்புக்கான ஒரு கருவிதான். தாய்மொழி மூலம் மட்டுமே அறிவை வழங்க முடியும். தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற உள்ளூர் மொழிகளில் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். கூகுள் தலைமை அதிகாரி கூட ஒரு தமிழர்தான். எனவே அறிவு வேறு, மொழி வேறு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்கும்.சர்வதேச அளவில் வாழ்வாதாரத்திற்கான மொழியாக ஆங்கிலம் இருப்பதால் அதனையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களுடன் எளிதில் பழக இந்தியை கற்றுக் கொள்வது நல்லது.
இதனால், ஆந்திராவிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், 3 மொழிகள் மட்டுமல்ல 10 சர்வதேச மொழிகளை ஊக்கவிக்க முயற்சி எடுக்கப்படும். இந்தியை கற்றுக்கொண்டால் மக்களுடன் பழக எளிதாக இருக்கும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆங்கிலத்தையும், தெலுங்கையும், தங்கள் அரசு ஊக்குவிக்கும்” என்று கூறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.
தமிழ்நாட்டை புகழ்ந்த ஆந்திர முதல்வர்
தமிழ்நாட்டிடை புகழ்ந்து பேசிய ஆந்திர முதல்வர்,”தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்று, மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர். அங்கு உயர் பதவிகளில் இருக்கும் பலர் தமிழர்கள்தான். ஐஏஸ் தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்க டெல்லி வருபவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் அது தமிழ்நாடுதான் என்ற நிலை இருக்கும், தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுக்க பயணிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.