“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசியதன் மூலம் கமல்ஹாசன் தனது ராஜ்யசபா சீட்டை உறுதி செய்துவிட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவு என்பதால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும், ஒருவேளை அதிகரிக்கப்பட்டால் அப்போதும் விகிதாசார அடிப்படையில் குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்ற குற்றசாட்டு நிலவுகிறது.
இந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, மநீம, தவெக என பெரும்பாலான கட்சியினர் கலந்துகொண்டனர். பாஜக, நாம் தமிழர், தமாகா ஆகிய கட்சிகள் மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
இந்தியா – ஹிந்தியா :
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கமல்ஹாசன், இந்தியவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள் என்றும், தொகுதி மறுசீரமைப்பு பற்றி தற்போது மத்திய அரசு ஏன் பேசுகிறது என்பதை கவனிக்க வேண்டும். நமது நாட்டில் தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளே போதும். ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி ஆகிய இரண்டையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசினார்.
சட்டமன்றங்களின் எண்ணிக்கை?
மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதுள்ள மக்களவை தொகுதி இடங்களே போதுமானது. இவர்களே 145 கோடி மக்களை வழிநடத்தி வருகின்றனர். மத்தியில் எடுக்கப்படும் முடிவுகள் மாநிலங்களால் செயல்படுத்துவது போல, முதலில் மாநில சட்டமன்றங்களின் எண்ணிக்கையை வேண்டுமானால் உயர்த்துங்கள் எனவும் கமல்ஹாசன் கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு என்பதால் தென் மாநில எம்பிக்கள் அடங்கிய கூட்டுக்குழுவை உருவாக்கவும், 2026ஆம் ஆண்டிற்கு பிறகும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.
கமலுக்கு வாழ்த்துக்கள் :
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மூத்த கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கமல்ஹாசன் மிக பெரிய நடிகர். அவர் தனது பேச்சால் தற்போது தனது ராஜ்யசபை (மாநிலங்களவை உறுப்பினர்) சீட்டை உறுதி செய்துவிட்டார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள் என கிண்டலாக தனது விமர்சனத்தை முன்வைத்தார் அண்ணாமலை.
சந்திக்க நாங்கள் தயார் :
மேலும் அவர் பேசுகையில், நாங்கள் (பாஜக) அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 45 கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளோம். சிறிய கட்சி பெரிய கட்சி என்றில்லாமல் எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொன்றாக அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திப்பார்கள். அவர்களுக்கு தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்க்கு பதில் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பொதுவெளியில் பேசுவது வேறு, தனி அறையில் நட்பாக பேசுவது வேறு. அதற்கு நாங்கள் தயார். எங்கள் தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை போன்ற தலைவர்கள் பேச உள்ளனர். அதனை எங்கள் கடமையாக கருதுகிறோம்.
முதலமைச்சர் பொய் கூறுகிறார்
எங்கள் கொள்கை எதிரிகளாக இருக்கும் திராவிட கட்சிகளுக்கும் நேரடியாக சென்று விளக்கம் அளிக்க உள்ளேன். முதலமைச்சர் அனைத்துக்கட்சிகளையும் தவறாக வழிநடத்துகிறார். பொய் கூறுகிறார். அவரிடம் யார் 848 சீட் என கூறினார்கள் என தெரியவில்லை. யாரேனும் புதிய நாடாளுமன்றத்தில் எண்ணி சொல்லிவிட்டனரா என தெரியவில்லை என பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.