மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு! 

டிரம்ப் சந்திப்பு குறித்து வருத்தம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தாங்கள், அமெரிக்காவின் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளார்.

Donald Trump - Zelenskyy

உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோர் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர். இதனை அடுத்து உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ உதவிகளை நிறுத்தப்போவதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

உக்ரைனில் உள்ள கனிமவளங்கள் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திலும் ஜெலென்ஸ்கி கையெழுத்திடாமல் மேற்கண்ட சந்திப்பின் போது பாதியிலேயே சென்றுவிட்டார். இருந்தும், அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளிக்கும் என ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

டிரம்ப் உடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு, டிரம்பின் அறிவிப்பு ஆகியவற்றை தொடர்ந்து ரஷ்யா, உக்ரைன் மீதான தங்கள் தாக்குதலை அண்மையில் தீவிரப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, ரஷ்யா தாக்குதல் இதனை அடுத்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், அமெரிக்காவின் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி பதிவில்..,

இதுகுறித்து ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில், ” உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட விரும்புகிறேன். முடிவில்லாத போரை நாங்கள் யாரும் விரும்பவில்லை. நீடித்த அமைதிக்காக உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. உக்ரைனில் அமைதியைப் பெற, அதிபர் டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட..,

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். முதல் கட்டமாக கைதிகளை விடுவிப்பது மற்றும் வான்வழி தாக்குதல் நிறுத்தம் – ஏவுகணைகள், நீண்ட தூர ட்ரோன்கள், எரிசக்தி மீதான குண்டு வீச்சுகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை – மற்றும் ரஷ்யா போர்நிறுத்தம் செய்தால் உடனடியாக கடலில் போர் நிறுத்தம் என அனைத்து போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கும் மிகவேகமாக செல்ல விரும்புகிறோம். அமைதி குறித்த வலுவான இறுதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.

உக்ரைனின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா எவ்வளவு உதவி செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதனை மதிக்கிறோம். அதிபர் டிரம்ப் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். இதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

சந்திப்பு வருத்தம் :

வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் வாஷிங்டனில் நடந்த எங்கள் சந்திப்பு, நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை. இப்படி நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. அதனை சரி வேண்டிய நேரமிது. எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு தகவல்தொடர்பு ஆக்கபூர்வமானதாக இருக்க விரும்புகிறோம்.

கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து, உக்ரைன் எந்த நேரத்திலும் அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்கி கையெழுத்திட தயாராக உள்ளது. இந்த ஒப்பந்தத்தை அதிக பாதுகாப்பு மற்றும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை நோக்கிய ஒரு படியாக நாங்கள் பார்க்கிறோம், இந்த அமைதி பேச்சுவார்த்தைகள் திறம்பட செயல்படும் என்று நான் நம்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்