“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை (மார்ச் 5ம் தேதி ) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை நிலவரம்
இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.