INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 249 ரன்கள் எடுத்துள்ளது.

துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் மோதி வருகிறார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா அணி தொடக்கத்திலே தடுமாறியது என்று சொல்லலாம்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதற்கு பிறகு களத்திற்கு வந்த விராட் கோலி ஆட்டத்தில் நின்று ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இந்திய அணி 6.4 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த தடுமாற்றத்தில் இருந்து நல்ல ஸ்கோரை டார்கெட்டாக வைக்கவேண்டும் என்பதால் அடுத்ததாக களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் இருவரும் ஆட்டமிழக்காமல் விளையாடினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் அணிக்கு ரன்களும் குவிந்தது. அதன்பின் ஒரு கட்டத்தில் அரைசதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு முன்னதாக அக்சர் படேல் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் இருவரும் நல்ல பார்ட்னர் ஷிப் அமைத்து விளையாடிய காரணத்தால் தான் அணிக்கு நல்ல ரன்கள் வந்தது. இவர்களை தொடர்ந்து களத்திற்கு வந்த கே.எல்.ராகுல் சீக்கிரம் தனது விக்கெட்டை கொடுத்து செல்ல அதன்பிறகு வந்த ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருவரும் சற்று நிதானமாக விளையாடி வந்தனர். ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியாக ஹர்திக் பாண்டியா களத்தில் நின்று கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார். இதனால் 50.ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு இலக்காக 250 ரன்களாக நிர்ணயம் செய்தது. மேலும், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இவருடைய பந்துவீச்சில் தான் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய விக்கெட்களை இழந்தனர்.