யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!
சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், ‘இசைஞானி’ இளையராஜாவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். “வேலியன்ட்” (Valiant) என்ற பெயரில் வெளியாகும் சிம்பொனி இசை நிகழ்ச்சி 2025 மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நடைபெறவுள்ளது என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
இதற்கிடையில், அவருடைய இந்த பெரிய சாதனைக்காக அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் முகஸ்டாலின் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இளையராஜாவின் இசைப் பங்களிப்பையும், இந்திய இசையை உலக அரங்கில் பறைசாற்றும் இந்த முயற்சியையும் பாராட்டி, அவருக்கு தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்தினார்.
இளையராஜாவை சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அதற்கான வீடியோவையும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு ” ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான #இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” எனவும் முகஸ்டாலின் கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில்… pic.twitter.com/bv9AUVxpl0
— M.K.Stalin (@mkstalin) March 2, 2025
சிம்பொனி குறித்து…
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை உருவாக்கினார். இது ஆசியாவிலிருந்து ஒரு இசையமைப்பாளரால் முதன்முதலாக இசையமைக்கப்பட்ட சிம்பொனி என்ற பெருமையைப் பெற்றது. ஆனால், அந்த சிம்பொனி அப்போது முழுமையாக வெளியிடப்படவில்லை.
எனவே, எப்போது இது வெளியிடப்படும் என அந்த சமயத்தில் இருந்து இப்போது வரை கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.இதனையடுத்து, இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, 2024 ஆம் ஆண்டு அக்டோபரில், இளையராஜா தனது “Symphony No. 1″ஐ லண்டனில் பதிவு செய்ததாகவும், அது 2025 ஜனவரி 26 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.