தியேட்டருக்கு படம் பார்க்க தான வர்ற பாப்கார்ன் ஏன் வாங்கி திங்குற? ராதா ரவி கேள்வி!
உதயம் தியேட்டர் இடித்தது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு என நடிகர் ராதா ரவி சமீபத்தில் பேசியுள்ளார்.

சென்னை : சென்னையின் அசோக் நகர் பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் (Udhayam Theatre) தற்போது இடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் வருகையால், உதயம் திரையரங்கின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து, பராமரிப்பு சவால்களை சந்தித்தது. இதன் காரணமாக, 2025 பிப்ரவரி மாதம், 40 ஆண்டுகால சேவைக்கு பின், இந்த திரையரங்கம் இடிக்கப்பட்டது.
இப்போது பல திரையரங்குகள் வந்தாலும் ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த திரையரங்குகளில் அதுவும் ஒன்று. எனவே, அப்படி பட்ட ஒரு திரையரங்கம் இடிக்கப்பட்டது நடிகர்களுக்கும் வேதனையை கொடுத்துள்ளது. எனவே, இது குறித்து நடிகர்கள் பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், ராதா ரவி சென்னையில் கடைசித்தோட்டா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” உதயம் தியேட்டர் சமீபத்தில் இடிக்கப்பட்டது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆரம்பத்திலே பெரிதாக கட்டப்பட்டு இப்போது இடிக்கப்பட்டதை நினைக்கும்போது கொஞ்சம் வேதனையாக தான் இருக்கிறது. இப்போதெல்லாம் பல படங்கள் வருகிறது. சமீபத்தில் ஒரு படத்தை பார்த்துவிட்டு படம் இறங்கிய இரண்டாவது நாளில் வெற்றி என விளம்பரத்தை பார்த்தேன். அதனை பார்க்கும்போதும் வேதனையாக இருக்கிறது.
இதெல்லாம் எதற்காக போடுகிறார்கள் என்று பார்த்தால் மக்கள் படம் பார்க்க உள்ளே வரமாட்டிக்கிறார்கள் என சொல்கிறார்கள். எதற்காக என்று கேட்டால் பாப்கான் விலை ஏற்றிவிட்டார்கள்..காபி விலை ஏற்றிவிட்டார்கள் என்று சொன்னார்கள். நான் சொல்கிறேன்..டிக்கெட் வாங்கிவிட்டு எதற்காக திரையரங்கிற்கு வருகிறாய்? படம் பார்க்கதானே வருகிறாய்? அப்புறம் எதற்காக பாப்கான் வாங்கவும் காபி வாங்கவும் செல்கிறாய்?
அதெல்லாம் வாங்காத படம் பார்க்க மட்டும் வா..தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்குது.பெரிய பெரிய சிட்டியில் மட்டும் தான் இப்படி நடக்குது.. செங்கல்பட்டு மாவட்டத்தில் எல்லாம் இப்படி இல்லை படங்கள் அனைத்தும் நன்றாக ஓடுகிறது” எனவும் ராதா ரவி பேசியுள்ளார்.