நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
அதிகாலை 2:51 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அதிகாலை 2.36 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலிருந்து அலறியபடி வெளியேறினர். ஆனாலும், தற்போது வரை பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடாரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2:51 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, பீகாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல் தெரிவிக்கின்றனர். அண்டை நாடான நேபாளில் கடந்த 2015இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.