மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
விஷால் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.60 கோடி வசூல் செய்திருந்தது.

சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு எமோஷனலான கமர்ஷியல் படத்தினை இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். காதல் வேணுமா காதல் இருக்கு…எமோஷனல் வேணுமா அதுவும் இருக்கு.. காமெடி வேணுமா காமெடியும் இருக்கு என அனைத்தும் குறையாதபடி ஒரு நல்ல படமாக வெளிவந்து இருக்கிறது.
படத்தில் வரும் பல காட்சிகள் நம்மளுடைய வாழ்க்கையில் நடந்தது போல இருப்பதால் படம் மக்களுக்கு பிடித்து போக குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு வருகிறார்கள். படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வசூலிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு லாபத்தையும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை எவ்வளவு என்றால் ரூ.37 கோடி தான். இந்த தொகையை படம் வெளியான 3 நாட்களில் மீட்டெடுத்து அசத்தியது மட்டுமின்றி அடுத்ததாக 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருவதன் காரணமாக இன்னும் சில நாட்களில் 100 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படம் இதுவரை உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மொத்தமாகவே 60 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் மொத்த வசூலை டிராகன் திரைப்படம் வெளியான 5 நாட்களில் முறியடித்துள்ளது.