அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!
அடுத்து 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வானது மணலில் நடைபெற வாய்ப்புள்ளது என பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும். அவ்வாறு 12 ஆண்டுகள் என 12வது முறை அதாவது 144வது ஆண்டான இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வானது கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (பிப்ரவரி 25) நிறைவடைகிறது.
இதுவரை சுமார் 65 கோடி பேர் உத்திர பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிராக்யராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று இறுதி நாள் என்பதால் புனித நீராட வரும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இன்றும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பிராக்யராஜிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில் பருவநிலை ஆர்வலர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அடுத்த மகா கும்பமேளா நிகழ்வின் போது ஆறுகள் அழியும் நிலை உள்ளது. இதனால் அப்போது மகா கும்பமேளா மணலில் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை. வைத்துள்ளார்
லடாக்கை சேர்ந்த பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பருவநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இமயமலை தற்போது வேகமாக உருகி வருகிறது. இமயமலை அடிவாரத்தில் இருந்து தான் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, சிந்து, சட்லஜ் நதி ஆகியவை உருவாகி வருகின்றன. இந்தியா, தனது பனிப்பாறைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
ஏற்கனவே கூறியபடி, இமயமலையின் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. அதோடு அப்பகுதி காடுகளும் அழிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், சில தசாப்தங்களில் நமது புனித நதிகளான கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் சிந்து ஆகியவை என்பது பருவகால நதிகளாக மாறிவிடும். அதாவது மழைபெய்தால் ஆறுகளில் தண்ணீர் இருக்கும். மழை இல்லை என்றால் ஆற்றில் தண்ணீர் இல்லை என்ற நிலை உருவாகும்.
இதன் பொருள் அடுத்த மகா கும்பமேளாவில் (144 ஆண்டுகள் கழித்து) புனித நதிகளில் மணல் படுக்கை மீது தான் கும்பமேளா நிகழ்வு நடக்கக்கூடும் என கூறியுள்ளார். மேலும், இமயமலை பனிப்பாறைகளின் உருகும் நிலையை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு ஒரு ஆணையத்தை அமைக்குமாறு பிரதமரை சோனம் வாங்சுக் வலியுறுத்தினார்.
இந்த பருவகால மாற்றம் குறித்த பிரச்சினையில் மக்களிடையே மிகக் குறைவான விழிப்புணர்வே இருக்கிறது என சோனம் வாங்சுக் அக்கடிதத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.