“தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!” – விஜய் பேச்சு.
தவெக மீதான விமர்சனம், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான விமர்சனம், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, கட்சி உட்கட்டமைப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து தவெக தலைவர் விஜய் பேசினார்.

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் , ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். பிரபல தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தவெகவின் அடுத்தகட்ட வேலைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். தவெக-வில் பூத் ஏஜெண்டுகளை நியமிப்பது அடுத்த பூத் ஏஜென்ட் மாநாடு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு என பேசினார்.
ஒருசில பேருக்கு எரிச்சல்..,
விஜய் பேசுகையில், ” உண்மையில் அரசியல் வேற லெவல். இங்கு தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம். யார் யாரை எப்போது எதிர்ப்பாங்கனே தெரியாது, யார் யாரை ஆதரிப்பாங்கனு தெரியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு பிடித்துப்போன ஒருவன் வந்தால் ஒருசில பேருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும்.
என்னடா இவன் திடீர்னு வந்துட்டான், இதுவரை நம் கூறிய பொய்களை நம்பி மக்கள் ஓட்டுபோட்டாங்களே, இவன் சொல்வது உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறதே, இவனை எப்படி குளோஸ் பண்ணலாம் னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா என தெரியவில்லை. வரவன் போறவன்லாம் கட்சி ஆரம்பிக்கிறானு சொல்லி இப்போ ஆட்சியில் இருப்பவர்கள் பேசுறாங்க.
மிக முக்கியமான காலகட்டம் :
இது நம்மளுக்கு மிக முக்கியமான காலகட்டம். கட்சி கட்டமைப்பு மிக முக்கியம். ஆலமரம் போல வேர்களை பலப்படுத்த வேண்டும், மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். நம்ம மேல ஒரு புகார் வருது, நமது கட்சியில் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்த போதும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதும் அங்கு இருந்தது வெறும் இளைஞர்கள் தான். அவர்களால் தான் 1967, 1977-ல் மிகப்பெரிய வெற்றி கிடைத்து. அதுதான் வரலாறு.
பண்ணையார்களுக்காக கட்சி இல்லை :
நம் மீது வந்த அடுத்த புகார், கட்சி நிர்வாகிகள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களாக இருக்கிறார்களாம். ஏன் இருக்க கூடாதா? நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி. எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பொறுப்பில் இருப்பார்கள். இது பண்ணையார்களுக்காக கட்சி இல்லை. அந்தகாலத்தில் பண்ணையார்கள் தான் கட்சி பதவியில் இருப்பார்கள். இப்போது பதவிக்கு வந்ததும் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் மக்கள் நலனை பற்றியோ , நாட்டின் நலனை பற்றியோ கவலை கொள்ளாமல், பணம் பணம் என்று மட்டுமே இருக்கிறார்கள். அவர்களை அரசியலை விட்டு அகற்ற வேண்டும். 2026 தேர்தலில் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து அவர்களை அகற்ற வேண்டும்.
அடுத்து நமது கட்சியில் பூத் ஏஜென்ட்களை பலப்படுத்த வேண்டும். மொத்தம் தோராயமாக 69,000 பூத் ஏஜென்ட்களை நியமிக்க வேண்டும். நாம் நியமித்த பிறகு பூத் கமிட்டி மாநாடு நடத்த போறோம். அன்று தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்ததில்லை என்று, தமிழ்நாட்டின் முதன்மை சக்தியாக அப்போது நாம் மாறுவோம்.
வாட் புரோ? இட்ஸ் ராங் ப்ரோ..,
மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை தரமாட்டேன் என்று கூறுவது, எதோ எல்கேஜி பசங்க சண்டை போடுவது போல உள்ளது. நிதி கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. கேட்டு பெறவேண்டியது இவர்கள் உரிமை. இவளோ சீரியஸாக இங்க பிரச்சனை போய்க்கொண்டு இருக்கும்போது, பாசிசமும் பாயசமும் அங்கே சோசியல் மீடியாவில் ஹேஸ்டேக் போட்டு விளையாடுறாங்க. நீங்க அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிப்பாங்களாம். அதனை நாம் நம்பணுமாம். வாட் புரோ? இட்ஸ் ராங் ப்ரோ. இதுக்கு நடுவுல நம்ம பசங்க சம்பவம் பண்ணிட்டு வெளியே வந்துடாங்க. இதெல்லாம் நம்ம சொல்லி புரிய வைக்கணும்னு அவசியம் கிடையாது. அது மக்களுக்கே தெரியும்.
வேறு மொழியை திணித்தால்?
எல்லாம் மொழியையும் படியுங்கள். அது அவர்கள் உரிமை. எப்போ வேணும்னாலும் ஒரு மொழியை ஒருவர் படிக்கலாம். கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சிக்கு எதிராக, கல்வி கொள்கைக்கு எதிராக வேறு மொழியை திணித்தால் அது சரியல்ல. அதனால் தான் தவெக மும்மொழி கொள்கையை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம். நம்பிக்கையோடு இருங்கள்.” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார் தவெக தலைவர் விஜய்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025