இந்தியாவுக்கு மட்டும் வரி விதிப்பில் ‘கருணை’ காட்ட முடியாது! டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!
இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் அதீத மரியாதை உள்ளது. இந்தியா தான் நிறைய வரி வசூல் செய்கின்றது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பபை உயர்த்தி அதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இறக்குமதி வரி :
இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில், அவரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார் . அதில், அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற நாடுகள் எந்தளவுக்கு அந்நாட்டில் இறக்குமதி வரி விதிக்கிறதோ. அதே அளவு வரி அந்த நாட்டு பொருட்கள் மீது அமெரிக்காவிலும் விதிக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது .
இந்தியாவில் வணிகம் கடினம்..,
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பு குறித்து பேசிய டிரம்ப், மஸ்க் இந்தியாவில் வணிகம் மேற்கொள்ள இந்த சந்திப்பை நடத்தி இருப்பார். இந்தியாவில் வணிகம் செய்வது சற்று கடினம். இந்தியாவில் வரி விதிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என வெளிப்படையாக இந்தியா அதிக வரி விதிக்கிறது என விமர்சனம் செய்தார் டொனால்ட் டிரம்ப்.
அதே அளவு வரி வசூல் :
தற்போது அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் டொனால்ட் டிரம்ப், அண்மையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “நான் நேற்று இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன். இரு நாட்டு உறவில் அடுத்து என்ன செய்யப் போகிறோம். என பேசினோம். அப்போது, பரஸ்பரம் நீங்கள் (இந்தியா) என்ன வரி வசூலித்தாலும், நான் (அமேரிக்கா) அதே அளவு வரியை வசூலிக்க போகிறேன்” என்று கூறினேன் . அதற்கு அவர் (பிரதமர் மோடி) “இல்லை, இல்லை, எனக்கு அது பிடிக்கவில்லை” என்று கூறினார். நான், ‘இல்லை, இல்லை, நீங்கள் என்ன வரி வசூலித்தாலும், நான் அதே அளவு வரியை வசூலிக்கப் போகிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் நான் அதை தான் செய்ய போகிறேன் . இந்திய விஷயத்திலும் அதேதான் என கூறினார்.
இந்தியாவில் அதிகளவு வரி :
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு, குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் இந்தியா அதிகளவு வரி விதித்து வருகிறது. அங்கு வெளிநாட்டு கார்கள் மீதான வரி 100% வரை உள்ளது என்று டிரம்ப் கூறினார். இத்தகைய அதீத வரி விதிப்பு அமெரிக்க பொருளாதாரத்திற்கு நியாயமற்றது. இதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவில் விற்க முடியாத சூழல் உள்ளது என்றும், இதுகுறித்து யாரும் என்னிடம் வாக்குவாதம் செய்ய முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார்.
21 மில்லியன் டாலர் :
இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் அதீத மரியாதை உள்ளது. இருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் (அமெரிக்கா) ஏன் 21 அமெரிக்க மில்லியன் டாலர் வழங்க வேண்டும்? அவர்கள் தான் நிறைய வரி வசூல் செய்கின்றனர். அவர்களிடம் நிறைய பணம் இருக்கும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.