மகனுக்காக காத்திருக்கும் அப்பா! முகமது நபி ஓய்வுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?
மகனுடன் ஒரே அணியில் விளையாடும் வரை தான் ஓய்வு பெறப்போவதில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது நபி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றி முடிவு எடுக்க குழப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய மகனுடன் இணைந்து ஒரே அணிக்காக விளையாடவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி நபி பேசியது
ஓய்வு பெறுவது குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய முகமது நபி ” முன்னதாக நான் ஓய்வு பெறுவதை பற்றி யோசித்து கொண்டு இருந்தேன். ஆனால், இப்போது ஓய்வு பெறுவதற்கு நான் விரும்பவில்லை. ஏனென்றால், நான் என்னுடைய மகனுடன் ஒரே அணியில் விளையாட விரும்புகிறேன். இது என்னுடைய மிகப்பெரிய கனவு என்று கூட சொல்லலாம். என்னுடைய கனவு நிறைவேறும் என நான் நினைக்கிறேன்.
எனவே, நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் என்னுடைய கடைசி ஒரு நாள் போட்டி இல்லை. நிச்சியமாக நான் தொடர்ந்து விளையாடுவேன். ஆனால், அதற்காக அணைத்து போட்டிகளிலும் விளையாடமாட்டேன். சில குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் விளையாடிக்கொண்டு இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்குவேன்” எனவும் தெரிவித்தார்.
நபி மகன் என்ன செய்கிறார்?
முகமது நபியின் மகன் ஹசனத் நபி (Hassan Nabi) ஒரு இளம் கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாட விரும்புகிறார். அதற்காக தான் தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக அவர் 18 வயது மற்றும், 2024 இல் ஆப்கானிஸ்தான் Under-19 உலகக் கோப்பை அணியில் பங்கேற்றார். கடந்த 2024 இல் நடைபெற்ற இந்த போட்டியில், ஹசனத் நபி, 5 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். எனவே, அவருக்கு ஆப்கானிஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
முகமது நபி இன்னும் சில ஆண்டுகள் ஓய்வு பெறாமல் விளையாட வாய்ப்பு இருப்பதால் அவர் ஓய்வு பெறும் முன், அவரது மகன் அணியில் சேர்ந்தால், ஒரே அணியில் அப்பா-மகன் விளையாடும் அரிய சந்தர்ப்பத்தை உலக கிரிக்கெட் பார்க்கலாம். ஆனால், இதற்கு கூடுதல் நேரம் எடுக்கலாம். இருப்பினும் முகமது நபி தன்னுடைய கனவு நிறைவேறும் வரை தொடர்ந்து விளையாடுவார் என்பது உறுதியாக தெரிகிறது.