“அந்த உரிமை யாருக்கும் கிடையாது! போர் குணம் குறையவில்லை!” சீரிய கனிமொழி!
எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தரமுடியாது எனக் கூறும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை : உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் சட்ட விதிகள் தடையாக உள்ளன என்றும், தமிழ்நாடு அரசு அரசியல் காரணங்களால் இந்த கொள்கையை எதிர்க்கிறது எனவும் பேசியிருந்தார்.
தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என்பது பிரதானமான மாற்றமாக உள்ளது. அவ்வாறு மும்மொழி கொள்கை கொண்டுவரப்படுவதன் மூலம் மத்திய அரசு இந்தி மொழி திணிப்பை மேற்கொள்கிறது என தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை பலமாக பதிவு செய்தனர். திமுக எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
அவர் கூறுகையில், ” எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தரமுடியாது எனக் கூறும் உரிமை அவர்களுக்கு (மத்திய அரசு) கிடையாது. இதுவொரு ஜனநாயக நாடு. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உரிமை உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் போர்க்குணம் எந்தளவும் குறைந்துவிடவில்லை. பொதுப்பட்டியலில் உள்ள கல்வி கொள்கையை மாநிலங்களின் மீது தொடர்ந்து மத்திய அரசு திணித்து கொண்டிருக்கிறது.
ஜிஎஸ்டி மூலமாக அனைத்து விதமான வரியையும் வசூலித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர அரசு மறுத்து வருகிறது. அனைத்து விதிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என மத்திய அரசு தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். அதனால் தான் இதனை எல்லோரும் எதிர்க்கிறார்கள். ” என திமுக எம்பி கனிமொழி கூறினார்.