அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது.

பஞ்சாப் : அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, |அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படையின் C-17 A குளோப்மாஸ்டர் விமானத்தில் 112 பேர் வந்துள்ளனர்.
இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. முன்னதாக, 119 இந்தியர்கள் கொண்ட இரண்டாவது குழு கடந்த சனிக்கிழமை இரவு விமான நிலையத்தை வந்தடைந்தது.
நாடுகடத்தப்பட்டவர்களை “மனிதாபிமானமற்ற முறையில்” நடத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், இரண்டாவது பகுதியாக வந்திறங்கிய இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு, விலங்குகளால் கட்டப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது சட்ட விரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அதே வேளையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மோடியை கடுமையாக சாடினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “மோடி தனது நண்பர் டொனால்ட் டிரம்புடன் கைகுலுக்கிக்கொண்டிருந்தபோது, இந்திய குடிமக்கள் இராணுவ விமானத்தில் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். கைவிலங்கிடப்பட்ட இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவது டிரம்ப் மோடிக்கு அளித்த பரிசு.” என்று கூறினார்.