ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு! சென்னை -மும்பை மோதும் போட்டி எப்போது?
மார்ச் 22 அன்று இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர் vs ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த தகவலின் படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகளில் மோதுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை இந்தியாவில் உள்ள 13 வெவ்வேறு இடங்களில் நடைபெறும். 22-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
அதைப்போல, இறுதிப்போட்டி வரும் மே 25 ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் தான் நடக்கிறது. முதல் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டி முறையே மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் எனவும், மே 23 அன்று இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஐபிஎல் இறுதிப் போட்டியாளர்களான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.
அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் மூன்றாவது போட்டியில், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மார்ச் 23 மாலை 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் பரம எதிரியான ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. ஐபிஎல் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி என்றாலே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. எனவே, இரண்டு அணிகளுக்கும் முதல் போட்டி இந்த ஆண்டு அது தான் என்பதால் இன்னுமே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
IPL schedule is out.#IPL2025 pic.twitter.com/XdgrAAElBm
— Niraj Kumar (@niraj_iit) February 16, 2025