பத்ம விருது: ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா.! நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் பங்கேற்கவில்லை…
பத்ம விருது பெறுபவர்களுக்கு தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

சென்னை : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடிகர் அஜித், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது.
2025 ஆம் ஆண்டில், நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கும், கிண்டி ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. ஆனால், பத்ம விருதுக்கு தேர்வான நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆளுநரின் பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு வருவதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் அதேபோல் சில காரணங்களால் இந்த நிகழ்வில் பங்கேற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.