டிராவிட், கும்ப்ளே, கோலி வரிசையில் ரஜத் படிதார்! ரசிகர்கள் சற்று அதிருப்தி!
ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஃபாப் டு பிளஸி ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனை அடுத்து RCB ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு முன்னர் இந்த அணியை வழிநடத்திய ஃபாப் டு பிளசியை விடுவித்தது. தற்போது அவர் 2025-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதனால் மூத்த வீரரகளாக விராட் கோலி, புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா, லயம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். இவர்களில் யாரேனும் ஒருவர் நியமிக்கப்படுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர். மீண்டும் RCB கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படுவார் என கோலி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கேப்டன் பொறுப்பு வேண்டாம் என அவர் ஒதுங்கிய காரணத்தால் தான் RCB அணிக்கு புதுப்புது கேப்டன்கள் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
RCB கேப்டனாக விராட் கோலி தொடர்ந்து இருந்தால் இந்தாண்டு மட்டுமல்ல, விராட் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெரும் வரை அவர்தான் பெங்களூரு அணியின் கேப்டனாக தொடர்ந்து இருப்பார். அதுவும் தற்போது நடக்கவில்லை. இதனால் யார் புதிய கேப்டன் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி தான். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய வீரர்கள் RCB-ஐ வழிநடத்தி வந்த நிலையில் தற்போது RCB புதிய கேப்டனாக 31 வயதான சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்காத ரஜத் படிதாரை புதிய கேப்டனாக RCB அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது விராட் கோலி மற்றும் RCB அணி ரசிகர்ளுக்கு சற்று அதிருப்தியாகவே பார்க்கப்படுகிறது. அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.
RCB முக்கிய நிர்வாகி..,
படிதாரின் நியமனம் குறித்துப் RCB அணியின் முக்கிய நிர்வாகி ராஜேஷ் மேனன் கூறுகையில், “இது RCB அணிக்கு ஒரு முக்கியமான முடிவு. எங்களிடம் பல வரலாறுகள் இருக்கின்றன. இந்த முடிவு எளிதானது அல்ல. இது குறித்து உள்நாட்டிலும் வெளியிலும் விவாதிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த முடிவு RCB அணிக்கு நல்லதை தரும் என்று நாங்கள் உணர்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இதுவரை RCB அணியை வழிநடத்திய கேப்டன்கள் :
- ராகுல் டிராவிட் – 2008 : ஐபிஎல் ஆரம்பித்த உடன் RCB-ஐ வழிநடத்திய முதல் கேப்டன்.
- கெவின் பீட்டர்சன் – 2009 (முதல் பாதி) : அந்த சமயம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கேப்டனாக அறியப்பட்டவர்.
- அனில் கும்ப்ளே – 2009 (இரண்டாம் பாதி) – 2010 : இவரது தலைமையில் RCB அணி 2009-ல் இறுதி போட்டிவரை சென்று டெக்கான் சார்ஜஸ் ஹைதிராபாத் அணியுடன் தோல்வி கண்டது.
- டேனியல் வெட்டோரி – 2011 – 2012 : இவரது தலைமையில் 2011-ல் RCB அணி இறுதி போட்டி வரை சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
- விராட் கோலி – 2013 – 2021 : RCB அணியை நீண்ட ஆண்டுகள் தலைமையேற்று வழிநடத்திய கேப்டன் விராட் கோலி தான். 2016இல் RCB-ஐ இறுதி போட்டி வரை கொண்டு சென்றார். இறுதி போட்டியில் ஹைதிராபாத் அணியிடம் பெங்களூரு அணி தோல்வி கண்டது. அதன் பிறகு தான் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இந்தியாவை தலைமை தாங்கிய கோலி , அந்த கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
- ஃபாஃப் டு பிளெசி – 2022 – 2023 : கடந்த 2 சீசன்களில் RCB அணியை வழிநடத்தினார்.
இவ்வாறு சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி நட்சத்திர வீரர்களாக இருந்தவர்கள் தான் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தி வந்துள்ளனர். இப்படியான சூழலில் சர்வதேச போட்டிகளில் பெரிதாக சோபிக்காத, ஐபிஎல் போட்டிகளில் பெரிய அளவு அனுபவமில்லாத ரஜத் படிதார் எவ்வாறு பலம் வாய்ந்த விராட் கோலி, புவனேஸ்வர் குமார், குர்னால் பாண்டியா மற்றும் சர்வதேச வீரர்களை வழிநடத்தி செல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரஜத் படிதார் :
ரஜத் படிதார், இந்திய அணிக்காக களமிறங்கி இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் களமிறங்கி 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். சர்வதேச டி20 போட்டியில் இதுவரை அவர் களமிறங்கியது இல்லை. ஐபிஎல் தொடரில் 2021-ல் மும்பை அணிக்காக களமிறங்கி 4 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். அடுத்து 2022 மற்றும் 2024-ல் பெங்களூரு அணிக்காக விளையாடினார். 2024-ல் சிறப்பாக விளையாடியதால் RCB அணி இவரை தக்க வைத்தது. இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரஜத், மொத்தமாக 799 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சகமாக 112 ரன்கள் எடுத்துள்ளார்.
விராட் கோலி பற்றி..,
2008 முதல் RCB அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி மொத்தம் 252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் எடுத்துளளார். இதுதான் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரன்களை எடுத்த வீரர். அதிகபட்சமாக 2016-ல் மட்டும் விராட் 973 ரன்கள் எடுத்திருந்தார் . அந்த வருடம் தான் RCB இறுதி போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.