அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,

அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan

சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறதா என்ற பேச்சுக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றனர்.

செங்கோட்டையன் ஆப்சென்ட் :

அதற்கு தீனி போடும் வகையில் அடுத்தடுத்த ‘திடீர்’ நகர்வுகள் அதிமுகவில் அரங்கேறி வருகின்றன. கடந்த ஞாயிற்று கிழமை கோவை அன்னூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய கூட்டமைப்புகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் கோபி தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அதிமுக அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

விழாவில் மறைந்த அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை அதனால் நான் விழாவில் கலந்துகொள்ளவில்லையே தவிர நான் விழாவை புறக்கணிக்கவில்லை என கூறியிருந்தார்.  எடப்பாடி பழனிச்சாமியின் பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசுபொருளாக மாறியது.

என்னை சோதிக்காதீர்கள்…

இதனை அடுத்து நேற்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பேசுகையில் கூட எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் என்று மட்டுமே குறிப்பிட்டு பேசினார். மேலும், என்னை சோதிக்காதீர்கள். பல வாய்ப்புகள் வந்தபோதும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான் மறந்துவிடாதீர்கள். அதுதான் என்னிடத்தில் நான் வைக்கும் வேண்டுகோள் என பேசியிருந்தார்.

ஆர்.பி.உதயகுமர் வீடியோ

இப்படியான சூழலில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பரபரப்பு வீடீயோவை வெளியிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் மறு உருவமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் மேலும் குறிப்பிடுகையில், ” எதிரிகள் , துரோகிகள் எடுத்துவைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்கமுடியாது. அது அதிமுகவிற்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது.

மறுஉருவம் இபிஎஸ் :

அதிமுக மக்கள் இயக்கம். மக்களுக்காக பாடுபடும் இயக்கம். மக்காளால் நான் மக்களுக்காவே நான். உங்களால் நான் உங்களுக்காக நான். எல்லோருக்கும் எல்லாம் பெற வேண்டும். இனி இல்லை என்ற நிலை வர வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு புரட்சி தலைவி அம்மா செயல்பட்டு வந்தார். புரட்சி தலைவி மற்றும் புரட்சி தலைவரின் மருவடிவமாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அதிமுகவை மீட்டெடுக்க  மாபெரும் தியாக வேள்வியை நடத்தி கொண்டிருக்கிறார்.

புரட்சி தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுத்து இயக்கத்தை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. புரட்சித் தலைவி அம்மா பேரவை நாளை முதல் களம் காண இருக்கிறது. இது சோதனை காலம் என யாரும் சோர்ந்துவிட வேண்டாம். அதிமுகவிற்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.  ” என தெரிவித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார்.

அதிமுகவில் உரசல்?

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை. அதனால் விழாவில் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் கூறியிருக்கும் வேளையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் பேசிய வீடியோ அதிமுகவில் ஏதோ உட்கட்சி பூசல் இருக்கிறதோ என்று அரசியல் வட்டாரத்தில் மேலும் முணுமுணுப்பை தூண்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்