“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!

பணக்கொழுப்பு அதிகம் இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள் என சீமான் பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Seeman - Sampathkumar

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் இவர்களுடைய சந்திப்பு பற்றி அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர்களும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தன் நாட்டின் நிலம், வளம், மக்களின் பிரச்சனை எதுவும் தெரியாத நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? எனக்கு அறிவு இருக்கிறது ஆனால், பணம் இல்லை. பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்” என  சீமான் விஜயை விமர்சனம் செய்து பேசினார்.

இந்த நிலையில், விஜய்க்கு பணக்கொழுப்பு என பேட்டி அளித்த நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு த.வெ.க தரப்பில் பதிலடி கொடுத்துள்ளது. தனியார் செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த தமிழக வெற்றிக் கழகம் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ஆ. சம்பத்குமார், “சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பது அவசியம். அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்டவர். அண்ணன் சீமான் “வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை சீமான் எத்தனை நாள் உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ?

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்