மணிப்பூர் கலவர சர்ச்சை ஆடியோ, உச்சநீதிமன்ற உத்தரவு! பதவியை விட்டு விலகிய முதலமைச்சர்!

மணிப்பூர் கலவர ஆடியோ சர்ச்சை, உச்சநீதிமன்ற உத்தரவு, நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களை தொடர்ந்து அம்மாநில முதல்வர் பொறுப்பை பைரன் சிங் ராஜினாமா செய்தார்.

Manipur CM Biren singh

இம்பால் : கடந்த மே 2023 முதலே மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அங்கு 2017-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சராக பைரன் சிங் பொறுப்பில் இருந்து வந்தார். இரு பிரிவினர் இடையே மோதல், உயிரிழப்புகள் என தொடர் சர்ச்சைகளை பைரன் சிங் ஆட்சிக்கு எதிர்கொண்டு வந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு :

இப்படியான சூழலில் கலவரத்தை தூண்டும் வகையில் பைரன் சிங் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்று வெளியானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குக்கி இனத்தை சேர்ந்தவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதி, பைரன்சிங் பேசியதாக கூறப்படுவது அவருடைய குரல்தானா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசின் தடவியல் சோதனை மையத்திற்கு அனுப்பி வைத்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இது பைரன் சிங்கிற்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர் அழுத்தம் :

ஏற்கனவே 60 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மணிப்பூரில், 31 இடங்களை பாஜக வென்றிருந்தது. அதுபோக, குக்கி மக்கள் முன்னணி கட்சியிலிருந்து இரண்டு எம்எல்ஏக்கள், தேசிய மக்கள் கட்சியிலிருந்து 7 எம்எல்ஏக்கள், நிதிஷ்குமாரின் (JDU) கட்சி ஆதரவு என பாஜக ஆட்சி செய்து வந்தது. இதில் குக்கி மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை தங்கள் ஆதரவை திரும்ப பெற்றன.

மேலும், சொந்த கட்சியினரே பைரன்சிங் முதலமைச்சராக தொடர வேண்டாம் என தீர்மானித்ததாக அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பைரன்சிங் தலைமையிலான ஆலோசனை கூட்டங்களை தொடர்ச்சியாக சில எம்எல்ஏக்கள் தவிர்த்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இதுவும் பைரன் சிங் ராஜினாமா செய்வதற்கு ஒரு காரணியாக அமைந்ததாக கூறப்படுகிறது.

பைரனை தவிர்த்த பாஜக தலைமை?

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இவ்விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டார் பைரன் சிங். ஆனால், மணிப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஒய். கெம்சந்த் மற்றும் மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகர் டி. சத்யபிரதா சிங் ஆகியோரை மட்டுமே அமித்ஷா சந்தித்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் :

இப்படியாக தொடர் அழுத்தங்களை எதிர்கொண்ட பைரன் சிங், முதலமைச்சர் ஆக தொடரக்கூடாது என இன்று மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் பைரன் சிங்கிற்கு எதிராக வாக்களிக்க சில பாஜக எம்எல்ஏக்கள் (சில அமைச்சர்களும்) திட்டமிட்டு இருந்ததாக தனியார் செய்தி நிறுவனம் செய்தில் வெளியிட்டுள்ளது.

பைரன் சிங் ராஜினாமா :

இவ்வாறான தொடர் அழுத்தங்களை அடுத்து, நேற்று ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் மணிப்பூர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்த பைரன் சிங்.  ” மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். மத்திய அரசு எடுத்த முடிவுகள், செயல்பாடுகள் மணிப்பூரின் வளர்ச்சி பணிகளை காக்க செய்தது. அதற்கு நன்றி கடன் பட்டுள்ளேன். மத்திய அரசின் இந்த பணி தொடர வேண்டும்.” எனக்  தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அஜய்குமார் பல்லா, அடுத்த முதலமைச்சர் யார் என தேர்வு செய்யப்படும் வரை பொறுப்பு முதலமைச்சராக இருக்கும்படி பைரன் சிங்கை வலியுறுத்தியுள்ளார். பைரன் சிங் ராஜினாமா செய்துவிட்டதால் இன்று நடைபெற இருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது என அறிவிக்கப்பட்டுவிட்டது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்