INDvENG : “நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு” மாஸ் காட்டிய ‘ஹிட்’மேன்! தொடரை வென்ற இந்தியா!
44.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி.

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து பேட்டிங் :
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் எடுத்தனர்.
பிலிப் சால்ட் 26 ரன்களும், ஹாரி புரூக் 31 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்களும், ஜேமி ஓவர்டன் 6 ரன்களும், கஸ் அட்கின்சன் 3 ரன்களும், அடில் ரஷித் 14 ரன்களும், லிவிங்ஸ்டன் 41 ரன்களும் எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். மார்க் வுட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, முகமது சமி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 50 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்ஸில் விளையாடியது.
ஃபார்முக்கு வந்த ‘ஹிட்’மேன் :
இந்திய அணி ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக கவலையாக இருந்த ஹிட்மேன் ரோஹித் சர்மா, நேற்று மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்பினார். கிட்டத்தட்ட 50 ஓவரில் 300 ரன்களை கடக்க வேண்டும் என்பதால் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே நிலையான தொடக்கத்தை அளித்தனர். ரோஹித் சர்மா 30 ஓவர்கள் நின்று 90 பந்தில் 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டு, 12 பவுண்டரிகள் கடந்து 119 ரன்கள் விளாசினார். சுப்மன் கில் 52 பந்துகளுக்கு 60 ரன்கள் விளாசினார்.
அடுத்து எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இந்த போட்டியில் மீண்டும் ஏமாற்றம் அளித்து 5 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடந்த போட்டியில் அதிரடி காட்டி நம்பிக்கை அளித்த ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியிலும் நிலைத்து ஆடி 44 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆகினார். கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் தலா 10 ரன்களில் அவுட் ஆக, ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நிலைத்து ஆடி 41 ரன்கள் எடுத்து இறுதி வரை அட்டமிழக்காமல் அணியை வெற்றிபாதைக்கு திருப்பினார். ஜடேஜாவும் 11 ரன்களுடன் களத்தில் நின்றார்.
தொடரை வென்ற இந்தியா :
இறுதியில் 44.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. ஆட்ட நாயகனாக நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டார்.