“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!
நல்ல கதைகள் அமைந்தால் நல்ல படம் எடுப்பேன் என்று என் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
![suseenthiran](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/suseenthiran.webp)
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத அளவுக்கு சென்ற இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். இவருடைய இயக்கத்தில் வெளியான நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டியநாடு, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்கள் இன்னும் வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது.
இந்த படங்களுக்கு பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த பாயும் புலி,மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன், ஈஸ்வரன், வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. எனவே, சுசீந்திரன் மார்க்கெட் சற்று சரிந்தது என்றே சொல்லலாம். தோல்விகளில் இருந்து கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு அவர் தற்போது 2K Love Story என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் வேதனை கதைகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு காலத்தில் தொடர்ச்சியாக நான் வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு தோல்வி படம் கொடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க ஆசைப்பட்டேன்.
ஆனால், 1 படம் தோல்விக்கு ஆசைப்பட்டேன் 10 படங்கள் தோல்வியாக அமையும் என்று நான் நினைக்க கூட இல்லை. இப்போதும் நல்ல கதைகள் அமைந்தால் நல்ல படம் எடுப்பேன் என்று என் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தோல்வி படங்களை நான் கொடுத்த சமயத்தில் நான் பட்ட வேதனைகளை என்னுடைய வார்த்தையால் சொல்ல முடியாது. அந்த வேதனைகளில் இருந்து என்னை வெளிய கொண்டு வந்தது நான் கதை எழுதும் பேனா தான்.
வெற்றி தோல்வி என்பது எப்போது வேண்டுமானாலும் வரும் எனவே, எதனைப்பற்றியும் கவலைப்படாமல் நான் என்னுடைய கதை எழுதும் வேளையில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தேன். நிச்சியமாக நான் இப்போது இயக்கியுள்ள 2K Love Story திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” எனவும் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.