ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
![V. C. Chandhirakumar win](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/V.-C.-Chandhirakumar-win-.webp)
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்பதால் இந்த முறை போட்டி என்பது திமுக vs நாதக என்று நிலவியது.
இதனால், ஆளும் திமுக கட்சி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டன. அதற்கேற்றாற்போலவே காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வந்தது. தொடர்ச்சியாகவே வி.சி.சந்திரகுமார் முன்னிலை பெற்று வந்தார்.
முதற்கட்டமாக, இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 251 தபால் வாக்குகள் பதிவாகின. அவற்றில் 18 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. செல்லுபடியாகும் 233 வாக்குகளில், தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 197 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13 வாக்குகள் பெற்றார், இது நோட்டா (NOTA) வாக்குகளான 18-க்கும் குறைவாகும்.
அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில்,தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த திமுக தற்போது வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் வி.சி.சந்திரகுமார் 1,14,439 வாக்குக்கள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள்பெற்றார். 90,629 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து ஆதரளவர்கள் மக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
வெற்றிபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரகுமார் ” எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே வென்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன்.இந்த தேர்தலில் திமுக வெற்றியடைந்ததை போல நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுசட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் ஆவார்” எனவும் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.