கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?
டெல்லியில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அங்கு யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர்கள் பேட்டியளித்து வருகின்றனர்.

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால், 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க உள்ளது. இப்படியான சூழலில் அங்கு யார் முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.
தற்போது ஒரு சில செய்தி நிறுவனங்கள் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங் தான் டெல்லி மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
டெல்லி மாநில முதலமைச்சர் தேர்வு விவகாரம் குறித்து பேசிய டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, “ பாஜக தேசிய தலைமைதான் டெல்லி முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யும். தற்போது டெல்லி முதலமைச்சர் யார் என்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. மக்களுக்கு துரோகம் செய்பவர்களை (ஆம் ஆத்மி) மக்கள் அவர்களுக்கு தோல்வியை தந்து இவ்வாறு தான் நடத்துவார்கள்.” எனக் குறிப்பிட்டார்.
பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா டெல்லி முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், “எல்லா மாநிலங்களிலும் எங்களுக்குக் கூட்டுத் தலைமை உள்ளது. வெற்றி பெற்ற பிறகு, எங்கள் தொண்டர்கள் முன்னிலையில் நாங்கள் முதலமைச்சரை தேர்வு செய்வோம். மற்ற கட்சிகள் அப்படியல்ல, மக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தைப் பெற்று தான் மக்கள் மன்றங்களுக்கு செல்வது எங்கள் செயல்முறை. எனவே யார் நமக்கு நல்ல தலைவராக இருப்பார்களோ, அவரை விரைவில் தேர்வு செய்வோம்.” என தெரிவித்தார்.