வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மற்ற வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.
அதிமுக, பாஜக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேச்சைகள் என 46 பேர் களத்தில் உள்ளனர். 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இதில், 3வது முறையாக அரியணை ஏறுமா ஆம் ஆத்மி? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 70 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றனர், 8.30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்படும் மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல்
தலைநகர் டெல்லியில் ஆட்சியமைக்கப்போவது யார் என நாடே எதிர்பார்க்கும் வாக்கு எண்ணிக்கை (மக்களின் தீர்ப்பு) சற்றுநேரத்தில் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின், மக்கள் செலுத்திய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகும்.