எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல என சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
![seeman about stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/seeman-about-stalin-.webp)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மட்டுமின்றி, மதுரை,கரூர், திருப்பூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிக்கூடம் படிக்கும் மாணவிகளுக்களுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களை குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த கவலையும் இல்லாமல் அல்வா சாப்பிட்டு கொண்டு இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசத்துடன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத்தவறி, சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ள திமுக அரசின் நிர்வாகத்திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல. அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.
என கூறியதுடன் பல இடங்களில் பாலியல் தொல்லை மாணவிகளுக்கு அழைக்கப்பட்டதாகவும் அதற்கான விவரத்தை குறிப்பிட்டு ” வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ளது திமுக அரசு. பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என்றெல்லாம் பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்.
இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் திமுக ஆட்சி அழிவது உறுதி! ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் சீமான் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்!@CMOTamilnadu @mkstalin
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம்… pic.twitter.com/EGhYaP6lMd
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) February 7, 2025