மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இதுவரை நெல்லை அல்வாதான் ஃபேமஸ். இப்போது மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் ஃபேமஸ் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

mk stalin about CentralGovt

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வழங்கி வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசை விமர்சனம் செய்து சில விஷயங்களை பேசினார்.

இது குறித்து பேசிய அவர்” ஒன்றிய பாஜக அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கூட்டணியில் இருக்கும் மாநில அரசுகளுக்கும், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு மட்டும்தான் திட்டங்களையும், நிதியையும் வழங்குவார்கள். கடந்த டிசம்பர் மாதம் கனமழையால் தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்பு அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த பாதிப்பை சரிக்கட்ட நிவாரணமும் அதிகமாக தேவைப்பட்டது. எனவே, இதற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதியும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய போதிலும் ஒன்றிய அரசு வழங்க எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இறுதியாக நீதிமன்றம் சென்ற போதுதான் வழங்க முன்வந்தார்கள்.

அதுவும் நாம் கேட்ட தொகையான 37,907 கோடி. ஆனால், அவர்கள் கொடுத்ததோ வெறும் 276 கோடி ரூபாய். நாம் கேட்டதில் இது ஒரு விழுக்காடு கூட இல்லை. இந்த பட்ஜெட்டிலாவது நமக்கு ஏற்ற நிதியை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்களோ தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது என்று சொல்லிவிட்டனர். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராது.

திருநெல்வேலி அல்வாதான் உலகம் முழுவதும் மிகவும் ஃபேமஸ். ஆனால், அதை விட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வா தான் இப்போது ஃபேமஸ்ஆகா இருக்கிறது. திமுக அரசை பொறுத்தவரையில் ஒன்றிய அரசை பொருட்படுத்தாமல் நமக்கு நாமே தமிழ்நாட்டை மேம்படுத்திக்கொண்டு வருகிறோம். அதன் காரணமாக தான் ஒன்றிய அரசு வெளியிடும் எல்லா புள்ளி விவரங்களில் முன்னிலையில் இருக்கிறோம். அதற்கு காரணம் வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்பது தான். எப்போதும் மக்களுக்காக இருப்போம்” எனவும் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்