மணப்பாறை : 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது
மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![Girl sexually harassed](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Girl-sexually-harassed.webp)
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து வரும் 4 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகி இருக்கும் தகவல் தான் பேரதிர்ச்சியாக எழுந்துள்ளது. அந்த மாணவி மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த போது அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, பள்ளி முடிந்த பிறகு மாலை வீட்டிற்கு சென்ற அந்த மாணவி பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவங்களை எடுத்து கூறியுள்ளார். மாணவி சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாரை தேடி பிடித்து அடித்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில்,மணப்பாறை காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக, பள்ளித் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் முதல்வர் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தற்போது திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மாணவி வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு 06.02.2025-ம் தேதி காலை 10.20 மணியளவில் மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி என்பவர் 06.02.2025-ம் தேதி இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் மேற்படி 1) வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்), 2) பள்ளியின் தலைவர் மாராச்சி, 3) தாளாளர் சுதா, 4) துணை தாளாளர் செழியன் மற்றும் 5) பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு தொடர்பாக, வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகளான ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1-வது எதிரி வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் காவல்துறையினர் இவ்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடனடியாக ஐந்து எதிரிகளையும் கைது செய்தும், மேலும் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிவரும் காலங்களில் மேற்படி விழிப்புணர்வு முகாம் தீவிரப்படுத்தப்படும்” என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.