“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்”… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு ரோஹித் ஷர்மா ஃபார்முக்கு வந்தால், அவரிடமிருந்து வேறு மாதிரியான கேப்டனை நாம் காண்போம் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய தினம் இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்கத்திலே தன்னுடைய விக்கெட்டை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பறிகொடுத்தார்.
சொல்லப்போனால், ரோஹித் ஷர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதற்கு முன், ரஞ்சி தொடரில் ரோஹித் 3 ரன்னில் அவுட்டாகினார். மும்பை அணிக்காக களமிறங்கிய அவர், ஜம்மு காஷ்மீரின் உமர் நசீர் மிர் பந்தில் யுத்வீர் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சர்வதேச வீரர்கள் உள்ளூர் போட்டியிலேயே சொதப்பியது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்திய அணிக்காக அவர் விளையாடிய கடந்த 10 இன்னிங்ஸ்களில் ரோஹித் குறைந்தது 20 ரன்களைக் கூட எடுக்கவில்லை என்பதால் அவர் மீது விமர்சனங்களும் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இப்போது வரை (2024- 25) சீசனில் ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 16 இன்னிங்ஸ்களில் (6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9, 2) மொத்தம் 166 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால், ரசிகர்கள் ‘ரோஹித் ஷர்மாவுக்கு என்ன தான் ஆச்சு’ என வருத்தத்தில் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னராவது ரோஹித் ஷர்மா ஃபார்மிற்கு திரும்புவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்பொழுது, “சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு ரோஹித் ஷர்மா ஃபார்முக்கு வந்தால், அவரிடமிருந்து வேறு மாதிரியான கேப்டனை நாம் காண்போம்” என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்போர்ட்ஸ்18 ஊடகத்திடம் பேசிய சுரேஷ் ரெய்னா, “ரோஹித் சர்மா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இந்த விக்கெட் அவர் மீண்டு வருவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இப்போது, அணி கட்டாக்கிற்குச் செல்லும், அங்கும் அவர் சிறப்பாகச் செயல்பட முடியும். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு அவர் ஃபார்முக்கு வந்தால் அவரிடமிருந்து ஒரு வித்தியாசமான கேப்டனையும் வித்தியாசமான அணுகுமுறையையும் நாம் காண்போம்,” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, சாம்பியன்ஸ் தொடர் கேப்டனாக ரோஹித்திற்கு கடைசி ICC தொடராக இருக்கலாம் என ரெய்னா தெரிவித்திருந்தார். அவர் இது குறித்து பேசும் போது, ‘ ரோஹித் ரன்கள் அடித்தால் அது அவரது தலைமைப் பண்பிலும் பிரதிபலிக்கும். கேப்டனாக இதுதான் அவரது கடைசி ICC தொடராக இருக்கும். அதனால் இதை வென்றால் அவருக்கு சிறப்பான முடிவாக இருக்கும்’ எனக் கூறியிருந்தார்.